நிறம்

நிறம்

By: Saipriya V

ஒரு பெண் ஏவ்வளவு படித்திருந்தாலும் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், திருமணம் என்று வரும் பொழுது அவளுடைய நிறமே முதன்மை படுத்தபடுகிறது. இது யாரோ ஒருவருக்கு எங்கோ நடக்கும் நிகழ்வு அல்ல. இது சராசரியாக எல்லா பெண்களும் நம் நாட்டில் எதிர்கொள்வது.

ஒரு பெண்ணின் அழகு அவளின் நிறத்தை பொருத்தே மதிப்பிடபடுகிறது. சிகப்பான பெண் அழகாகவும், கருப்பான பெண் அழகு குறைந்தவளாக கருதப்படுகிறாள். நல்ல வேலை, நல்ல வரன் அமைய வேண்டும் என்றால் பெண் “சிவப்பாக” இருக்க வேண்டும் என்ற சொல்லப்படாத சட்டம் நம் சமுதாயம் உருவாக்கி உள்ளது.

நிறம் கருப்பான பெண்கள் கேலி பொருளாக கருதப்படுகிறார்கள். திருமண இணையதளங்களில் மணப்பெண் தேடுவோர், பெண் சிகப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருத்தல் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இதனால் நிறம் கறுப்பான பெண்கள் திருமணச்சந்தையில் அடிமாடுகளாகவே பார்க்கப் படுகிறார்கள்.

திருமணம் என்றாலே ‘வரதட்சணை’ என்று ஊறிப்போன நமது களாச்சாரத்தில், கறுப்பான பெண் என்றால் அதிக வரதட்சணை கேட்கும் அவல நிலையும் நம் நாட்டில் உள்ளது.

இதில் நமது தொலைக்காட்சிகளில் வரும் “சிகப்பழகு” விளம்பரங்களுக்கு அதிக பங்கு உண்டு. ஒரு கருப்பான பெண் எல்லோராலும் நிராகரிக்கப்படுகிறாள், கிண்டலும் கேலியும் செய்யப்படுகிறாள். அதே பெண் சிகப்பழகு களிம்புகளை பூசியவுடன் “சிகப்பாகிறாள்”, எல்லோராலும் கவரப்படுகிறாள், அழகான ஆணை கரம் பிடிப்பது போல காட்டப்படுகிறது.

அதுமட்டும் அல்லாது தொலைக்காட்சிகளில் வரும் பெரும்பாளுமான தொடர்கதைகளிலும், திரைப்படங்களிலும், சிகப்பான பெண்ணை நல்லவளாகவும், கதாநாயகியாகவும், கருப்பான பெண்ணை மோசமான குணம் கொண்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். பல திரைப்படங்களில் கருப்பான

பெண்களை மையப்படுத்தி நகைச்சுவை என்கிற பெயரில் இழிவுபடுத்தப்படுத்தப்படுகிறது. இதன் தாக்கம் நம் சமுதாயத்தில் ஆழ பதிந்துள்ளது. பெண் பார்க்கும் படலம் தொடங்கும் முன்னரே பெண் என்ன நிறம் என்பதே முதல் கேள்வி.

இந்நிலை மாறவேண்டும் எனில், பெண்ணின் நிறம் என்பது அவள் தோலின் நிறமே தவிற, அது அவளின் அடையாளம் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்!